சேலம் - தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தொப்பூர் மலைப்பாதையில் நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் உயர்மட்ட மேம்பாலத் திட்டப் பணிகள் 41 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. ரூ.905 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 2028 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை 44-ல் அமைந்துள்ள தொப்பூர் மலைப்பாதை பகுதியில் அடிக்கடி விபத்துகள் மற்றும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக 2018 முதல் 2022 வரை நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 64 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து ஓட்டத்தை சீராக்கவும் மத்திய அரசு இந்த மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் மற்றும் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீநிவாசலு தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
2025 மார்ச் 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2028 மார்ச் 20-ஆம் தேதிக்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது 41 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்றும், திட்டம் நிறைவடைந்த பிறகு விபத்துகள் கணிசமாக குறைந்து பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும் என்றும் கூறினார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்களாக தற்போதுள்ள நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவது, புதிய ஆறு வழி மாற்றுப்பாதை அமைக்கப்படுவது, மலைப்பாதை பகுதியில் உயர்மட்ட சாலை மற்றும் மேம்பாலம் கட்டப்படுவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும், நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் சாலைப் பாதுகாப்பு மேம்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் குறைந்து சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வேகமாகவும் சீராகவும் நடைபெறும். குறிப்பாக பெங்களூரு - சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்தத் திட்டம் பெரும் பயனளிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.



-hcTFAGMRGb.jpg)