ட்ரெண்டிங்

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கர்ப்பிணி போராட்டம்!

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி 4ஆவது நாளாக கர்ப்பிணி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். 

சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மோகன்ராஜ்- பவித்ரா காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இந்தாண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. சென்னையில் இருவரும் வசித்து வந்த நிலையில், உறவினர்களைப் பார்க்க மோகன்ராஜ், சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், மோகன்ராஜ் தன்னுடைய மனைவி பவித்ராவைப் பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் தனது கணவர் வீட்டிற்கு பவித்ரா சென்றிருந்த போது, அவரது உறவினர்கள் மோகன்ராஜை பார்க்க  வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். இது குறித்து ஓமலூர் காவல்நிலையத்தில் பவித்ரா அளித்த புகாரின் பேரில், மோகன்ராஜின் உறவினர்கள் ஏழு பேர் மீது வரதட்சணைக் கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். 

அதன் பிறகு, காவல்துறையினர் மோகன்ராஜின் குடும்பத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியும், காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரியும் இரவு, பகல் பாராமல் கணவர் வீட்டின் முன்பு பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் பவித்ராவின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.