இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைக்கத் தயாராகியுள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம். இந்நிறுவனம் உருவாக்கியுள்ள ‘விக்ரம்-1’ ராக்கெட், விரைவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் ஏவுதளத்தில் இருந்து முதல் முறையாக விண்ணில் பாய உள்ளது.
இந்நிறுவனத்தை, இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா மற்றும் நாக பாரத் டாக்கா இணைந்து தொடங்கினர். மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இஸ்ரோவில் பணியாற்றிய பவன் குமார், விண்வெளி தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தால் ஸ்டார்ட் அப் உலகில் குதித்தார்.
2022-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் ஸ்கைரூட் நிறுவனம் கவனம் பெற்றது. தற்போது ரூ.10,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்புடன், இந்தியாவின் முன்னணி தனியார் விண்வெளி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
விரைவில் ஏவப்பட உள்ள ‘விக்ரம்-1’ ராக்கெட், சுமார் 300 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாகும். எதிர்காலத்தில் அதிக எடையைக் கொண்டு செல்லக்கூடிய புதிய ராக்கெட்டுகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பவன் குமார் கூறுகையில், “எதிர்காலத்தில் ராக்கெட் சேவைகளும் வாடகை கார் அல்லது விமான சேவைகளைப் போல எளிதாக கிடைக்கும். சிறிய செயற்கைக்கோள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், விண்வெளித் துறையில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார்.



-SXgDfGgJfO.jpg)