சேலம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு கோட்டை ஸ்ரீ அழகிரிநாதப் பெருமாள் திருக்கோயிலில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று (ஜன.10) அதிகாலை வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையிலே பக்தர்கள் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிக்காக அழகிரிநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை 05.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிரிநாத பெருமாள் "பரமபத வாசல்" என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள், கோயிலின் கிழக்கு வாசல் வழியாக மீண்டும் கோவிலுக்குள் சென்று உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.



