ட்ரெண்டிங்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!..

 

சேலத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் பங்கேற்பு..

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கவும், மருத்துவக் கல்வியில் சமத்துவத்தை நிலைநாட்டவும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொத்தமாக 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

நீட் தேர்வு நடைமுறையால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், பொருளாதார பின்னடைவு காரணமாக பல திறமையான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகின்றனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பயிற்சி மையங்களை நம்பியுள்ள இந்த தேர்வு முறை மாணவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிடும் வகையில் செயல்படுவதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவக் கல்வி சேர்க்கையை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.