ட்ரெண்டிங்

தங்கம் மீதான சுங்க வரி உயர்வு!..

 

6%-ல் இருந்து 15%-ஆக உயர்த்திய மத்திய அரசு...

தங்கத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன்படி, இதுவரை 6 சதவீதமாக இருந்த இறக்குமதி சுங்க வரி தற்போது 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்திய சந்தையில் ஆபரணத் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வரி அமைப்பின் படி, 10 சதவீதம் அடிப்படை சுங்க வரியாகவும், 5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியாகவும் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய குடும்பங்களில் தங்க முதலீடு அதிகரித்துள்ளதாகவும், தங்கம் சார்ந்த முதலீட்டு திட்டங்களிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தங்கம் மற்றும் பிற உலோகங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தது. தற்போது மீண்டும் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

மேலும், தங்கத்தின் மீது ஜிஎஸ்டி வரியும் தனியாக வசூலிக்கப்படுவதால், எதிர்வரும் நாட்களில் நகை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.