ட்ரெண்டிங்

சேலம் உள்பட 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் உள்ள 1,309 ரயில் நிலையங்களில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ரூபாய் 24,470 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். 

அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள பெரம்பூர், கூடுவாஞ்சேரி, அரக்கோணம் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படவுள்ளன. தஞ்சை, மயிலாடுதுறை, போத்தனூர் மற்றும் சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களும் சீரமைக்கப்படவுள்ளன. 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ரயில் நிலையங்களின் மேம்பாடு சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு ரயில் நிலையமும் நகரம் மற்றும் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் சின்னமாக இருக்கும். எதிர்மறை அரசியலைக் கடந்து நேர்மறை அரசியலின் பாதையில் பயணித்து வருகிறோம். எதிர்க்கட்சியினர் தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்; செய்பவர்களையும் விடமாட்டார்கள். நாடாளுமன்ற கட்டடம், போர் நினைவகம் போன்றவற்றைக் கட்டிய போது, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன" என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ரயில்வேத்துறை அதிகாரிகள், தென்னக ரயில்வே பொது மேலாளர், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர், பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.