விஜய்க்கு அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவு..
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவான நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். பின்னர் சபாநாயகர் அறிவிப்பின் பேரில் உறுப்பினர்கள் பெயர் வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் வெளிப்படையாக தெரிந்தது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணி தீர்மானத்தை எதிர்த்த நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில் திமுக வெளிநடப்பு செய்த நிலையில், பாமக மற்றும் பாஜக நடுநிலை வகித்தன.
வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு பேசிய முதல்வர் விஜய், “மக்கள் கொடுத்த நம்பிக்கையை காப்பது எங்கள் அரசின் கடமை” என்று தெரிவித்தார்.



