முதல்வர் விஜயின் நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு…
தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் தற்போது 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 717 மதுக்கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை வரவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், “போதை பழக்கத்திலிருந்து மக்களை மீட்க மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்கள் தொடங்க வேண்டும். மேலும், டாஸ்மாக் பணியாளர்களின் வேலைவாய்ப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், “மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அந்த இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “717 கடைகள் மட்டுமல்லாமல் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்” என வலியுறுத்தினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “மதுவிற்பனை அரசின் பணியாக இருக்கக் கூடாது. இன்று தொடங்கியுள்ள இந்த நடவடிக்கை மேலும் விரிவடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மதுக்கடைகள் மூடப்படும் அறிவிப்பால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.



-hcTFAGMRGb.jpg)