ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்!

தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், மளிகைப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரேஷன் கடைகள் மற்றும் பசுமை அங்காடிகளிலும் தக்காளி மற்றும் மளிகைப் பொருட்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டிருந்தார். 

அந்த வகையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தில்லை நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், டாக்டர் சுப்பராயன் ரோடு, எம்டிஎஸ் நகர், சுப்பிரமணிய நகர், பிடாரி கோவில் தெரு, புது திருச்சி கிளை ரோடு, தாதம்பட்டி, திருவாக்கவுண்டனூர், ஸ்ரீரங்கப்பாளையம், தேவாங்கபுரம், சாமிநாதபுரம், ஜவகர் மில் காலனி, சொர்ணபுரி, மெய்யனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. 

இதனை பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து ஆவலுடன் தக்காளியை வாங்கிச் சென்றனர். ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.