முதல்வர் விஜய் உள்ளிட்ட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு:
தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நேற்று தமிழக முதலவராக பதவியேற்ற விஜய், இன்று சட்டப்பேரவை கூட்டத்திலும் வழக்கம்போல கோட் சூட் அணிந்து பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. காலை முதலே சட்டப்பேரவை வளாகம் அரசியல் பரபரப்புடன் காணப்பட்டது.
முன்னதாக, சோழவந்தான் தொகுதியை சேர்ந்த தவெக உறுப்பினர் எம்.வி.கருப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான ஒப்புதல் கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட நிலையில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று மாலை ராஜ்பவனில் கருப்பையாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அதிமுக தரப்பில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவும் தனித்தனியாக சட்டப்பேரவைக்கு வந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.
காலை 9.30 மணியளவில் கூட்டம் தொடங்கியதும், தற்காலிக சபாநாயகர் உரையாற்றினார். அதன் பின்னர் முதல்வர் விஜய் முதலில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து பதவியேற்றனர்.
புதிய அரசியல் மாற்றங்களுடன் தொடங்கியுள்ள இந்த சட்டப்பேரவை கூட்டம், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.



