தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாட்டம் நடைபெற்றது.
சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசமரத்து கரட்டூர் பகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
அதேபோல் சேலம் தெற்கு தொகுதி A. விஜய் தமிழன் பார்த்திபன் வழிகாட்டுதலின்படி, தாதகாப்பட்டி பகுதி இரண்டு செயலாளர் எல்.ரவிக்குமார் மற்றும் 56வது வார்டு செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் தெற்கு முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் சேலம் ராஜகணபதி திருக்கோவிலில் முதலமைச்சர் விஜயின் பெயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் ரீஹான பேகம், ரேஷ்மா, வித்யா, கார்த்திக் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜாவித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சித்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தமிழக வெற்றி கழகத்தின் வக்கீல் அணி சார்பில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மண்டல ஒருங்கிணைப்பாளர் காந்தி தலைமையிலும், வக்கீல் அணி நிர்வாகி பிரின்ஸ் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலமைச்சர் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

-PpIYsMvADU.jpg )

-hcTFAGMRGb.jpg)