சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று (ஜூன் 17) சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கடந்த 1978- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத்தில் 784 சங்கங்களில் மொத்தம் உள்ள 2,24,305 உறுப்பினர்களில் 46,947 பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 6.35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது.
அதேபோன்று, சேலம் ஆவினில் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால் பண்ணை, ஆத்தூரில் 1.30 லட்சம் லிட்டர் திறன் கொண்ட குளிரூட்டும் நிலையம், 5.82 லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட மொத்தம் 104 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சரால் ரூபாய் 12.58 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, சேலம், நாமக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் பாலகங்கள் என மொத்தம் 224 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.
விவசாயிகள் தங்களது மாடுகள் மூலம் சராசரியாக 6 முதல் 7 லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றனர். இதன் சராசரியை 10 முதல் 12 லிட்டர் பால் கொள்முதல் செய்யும் அளவிற்கு உயர்த்திவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துவிடும். அதற்கு என்னென்ன பணிகளை விவசாயிகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், இக்கருத்தரங்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டு பால் உற்பத்தியை அதிகப்படுத்தி அதிக இலாபம் பெறும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைக் கையாள்வது குறித்தும், பால் உற்பத்தியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)