ட்ரெண்டிங்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்!

 

சென்னையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று (ஜன.19) மாலை 06.00 மணிக்கு 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

 

தென்னிந்தியாவில் முதன்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஜனவரி 19- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறும் போட்டியில் 5,000- க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

 

பேட்மிண்டன், நீச்சல், வாலிபால், யோகாசனம், சைக்கிளிங், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 26 போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.