சேலம் குமாரசாமி பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத திருவிழா இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 17ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழாவில், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலகு குத்தும் நிகழ்ச்சியில், பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து கங்கணம் கட்டி கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், குழந்தைப் பாக்கியம், திருமண தடைகள் நீக்கம் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றியதற்காக பக்தர்கள் முகம், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தியும், சூலம், பட்டாக்கத்தி போன்றவற்றை வாயில் தாங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் அம்மன் வேடமணிந்து, பல்வேறு வாகனங்களில் அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கோவிலில் திரண்டனர். இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை அக்னிகரகம் மற்றும் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை தீமிதி (அக்னி குண்டம் இறங்குதல்) நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


-SXgDfGgJfO.jpg)