ஆன்மிகம்

யுகாதி விழா: சேலத்தில் கத்தி போடும் நிகழ்வு – நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 

தெலுங்கு புத்தாண்டான யுகாதி முன்னிட்டு, அம்மாபேட்டை பகுதியில் உள்ள சவுண்டம்மன் கோவில் வளாகத்தில் பாரம்பரிய கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டும் மாதேஸ்வரன் கோவில் சார்பில் வீரகுமாரர்கள் கலந்து கொண்டு, கத்தி போடும் வழிபாட்டை நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் திருவீதியுலா நடைபெற்றது.

இதற்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்தி போட்டபடி ஊர்வலமாக சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடலில் கத்தியால் கீறி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ரத்தம் சொட்டிய நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டது காண்போரை ஆச்சரியப்படுத்தியது.

அம்மாபேட்டை மெயின் ரோடு, கோவிந்தன் தெரு, திரு.வி.கா தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பின்னர் கோவிலை வந்தடைந்தது.

இந்த நிகழ்வில் வீரகுமாரர்கள் குழுத் தலைவர் பாலு, கோவில் தலைவர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.