ட்ரெண்டிங்

சேலத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

சேலம் மாநகராட்சியில் உள்ள தொங்கும் பூங்காவில் இன்று (டிச.18) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மக்களின் தேவைகளை நுணுக்கமாக கவனித்து, அதற்குரிய தீர்வுகளை வழங்குவதில் ஈடற்ற அரசாகத் திகழும் நம் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பாதையில் மேலும் ஒரு மைல் கல்லாக மக்களுடன் முதல்வர் திட்டம் உருவாகி இருக்கிறது.

கோவையில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்த நிலையில், சேலத்தில் நாம் இத்திட்டத்தை தொடங்கி வைத்தோம். மக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆய்வு செய்து பொதுமக்களுடன் உரையாடினோம். மேலும், அங்கு பெறப்பட்ட மனுக்களில், உடனடியாக தீர்வு காணப்பட்டவற்றின் அடிப்படையில், 36 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, காதொலி கருவிகள், தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.

மக்கள் நலன் காப்பதில் புதிய புரட்சியைச் செய்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.