ட்ரெண்டிங்

சேலத்தில் என்.டி.ஏ. கண்டன ஆர்ப்பாட்டம் !

சேலம்:-

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்வதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்தாமல், கூட்டணியை காப்பாற்றுவதிலும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதிலும் ஈடுபட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் செம்மலை குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய செம்மலை, “ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கும்போது நீரோ மன்னன் வீணை வாசித்தது போல தற்போது ஸ்டாலின் செயல்படுகிறார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுகுறித்து முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை,” என்றார்.

மேலும், “கூட்டணி கட்சிகளை பாதுகாப்பது, குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவது, வாரிசு அரசியலை முன்னெடுப்பது போன்றவற்றிலேயே ஸ்டாலின் கவனம் செலுத்துகிறார். காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.தமிழகத்தில் மாற்றம் வர ஆட்சி மாற்றம் அவசியம் எனவும், அதிக கட்சிகளை கூட்டணியில் இணைப்பதால் வெற்றி பெற முடியாது எனவும் செம்மலை குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சந்திரசேகரன், வெங்கடாஜலம், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் மற்றும் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.