சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலம் அடுத்த அணைமேட்டில் அமைந்துள்ள ராஜ முருகன் ஆசிரமத்தில், 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலைக்கு இன்று காலை மிக விமர்சையாக குடமுழுக்கு மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் 56 அடி உயர முருகன் சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், அந்த சிலை முனியப்பன் சிலையைப் போல அமைந்துள்ளது என்ற சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, அந்த சிலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ஆசிரம நிர்வாகம் பெரும் பொருள் செலவில் பழைய சிலையை அகற்றி, புதிய அழகிய ராஜமுருகன் சிலையை உருவாக்கி அமைத்தது. தற்போது அந்த சிலை சேலம் மாவட்டத்தில் இரண்டாவது உயரமான முருகன் சிலையாகத் திகழ்கிறது. முதல் இடத்தில் பெத்தநாயக்கன் பாளையம் முத்துமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள 100 அடி உயர சிலை உள்ளது.
புதிய ராஜமுருகன் சிலைக்கான கும்பாபிஷேக விழா கடந்த 17ஆம் தேதி முகூர்த்தக்கால் நட்டதுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நடந்த வேத பாராயணம், யாக பூஜைகள் மற்றும் துவஜாரோகண நிகழ்ச்சிகள் இன்று காலை நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிய நிலையில், பிரம்மாண்டமான 56 அடி முருகன் சிலை மீது புனித தீர்த்தம் ஊற்றி குடமுழுக்கு மற்றும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “அரோகரா! அரோகரா!” என முழக்கமிட்டு ராஜ முருகனை வழிபட்டனர்.
விழா நடைபெறும் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முருக பக்தர்களால் நிரம்பிய அணைமேடு பகுதி இன்றைய தினம் திருவிழா போல் களைகட்டியது.


-SXgDfGgJfO.jpg)