ஆத்தூர், கெங்கவல்லி அருகே ஓராண்டாகியும் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடமலை ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, இன்னிலையில் 12 வார்டில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஓராண்டாகியும் முறையாக குடிநீர் வழங்காததால் அருகிலுள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதால் குழந்தைகளை உரிய நேரத்தில் பள்ளி அனுப்ப முடியவில்லை என்றும் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிகுடங்களுடன் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


