சேலம் மாவட்டம், சன்னியாசிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 35). இவர் எல்.ஐ.சி. முகவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அம்மாப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான 38 வயது பெண்ணுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
நாளடைவில் கதிர்வேலின் நடவடிக்கைப் பிடிக்காததால், அவரை சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய கதிர்வேல், நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால், நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கதிர்வேல் அழைத்த இடத்திற்கு சென்ற பெண்ணை, அவர் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். கதிர்வேலிடம் இருந்து தப்பித்து வந்த பெண், அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. முகவர் கதிர்வேலை மகளிர் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


