ட்ரெண்டிங்

அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

 

சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில் அரசின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி இன்று (ஜன.30) கலந்துரையாடினார்.

 

 

சேலம் மாநகராட்சி, அய்யந்திருமாளிகையில் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக, இம்மையத்தில் ஸ்மார்ட் வகுப்பறை, இணையதள வசதிகளுடன் கூடிய கணினி மையம், வாசிப்பு அறை, எல்.சி.டி தொலைக்காட்சி, புரொஜெக்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் 20,000- க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

 

 

குறிப்பாக, இவ்வறிவுசார் மையம் பல்வேறு அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் அமைதியான சூழ்நிலையில் அமையப்பெற்றுள்ளதால் தற்போது அதிகளவிலான மாணவ, மாணவிகள் இவ்வறிவுசார் மையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆய்வுப் பணியின்போது அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

 

அப்போது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு ஐயங்களை மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தி ஊக்கப்படுத்தினார். மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வழங்கிடவும், அறிவுசார் மைய வளாகத்தைத் தொடர்ந்து தூய்மையாக பராமரித்து வரவேண்டும் எனவும் பொறுப்பு அலுவலருக்கு அறிவுரைகளை வழங்கினார்.