மொத்தமாக தயாரான திருச்செந்தூர்...காணும் இடமெல்லாம் அரோகரா....அரோகரா....அரோகரா என்ற முருகப் பக்தர்களின் கோஷம்....திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலக புகழ்பெற்ற முருகன் சன்னதியாக இருக்கிறது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2022- ஆம் ஆண்டு கோவிலில் சுமார் ரூபாய் 300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதில் திருக்கோயிலின் ராஜகோபுரம் கோயிலின் வெளிப்பிரகாரம், கோயிலைச் சுற்றி இருந்த பக்தர்கள் தங்கும் அறைகள் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளனர்.
பிரம்மாண்ட யாகசாலை பூஜை:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலின் ராஜகோபுரம் அருகே 8,000 சதுர அடியில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு 76 குண்டங்களில் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
37 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில் வாசல்:
கடந்த 2009- ஆம் ஆண்டிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஜூலை 07- ஆம் தேதி மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஜூலை 07- ஆம் தேதி காலை 05.00 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று சரியாக காலை 06.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க 37 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக கடம் புறப்பாடு நடைபெற்றது.
சரியாக காலை 06.50 மணிக்குள் கோவிலின் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு முருகப் பக்தர்களின் அரோகரா....அரோகரா....கோஷத்துடன் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதே நேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பு பேருந்துகள், மருத்துவ வசதி, உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக் கொடுத்தனர்.
பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேக விழாவை நேரடியாக காண்பதற்காக கடற்கரை பகுதியில் மட்டும் 50,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து கும்பாபிஷேக விழாவை நேரடியாகக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் 65 இடங்களில் எல்.இ.டி. திரைகள் மூலம் பக்தர்கள் மஹா கும்பாபிஷேக விழாவைக் காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் 6,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 300- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


-SXgDfGgJfO.jpg)