தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றாக சேலம் மாவட்டம், ஏற்காடு உள்ளது. ஆண்டுதோறும் ஏற்காட்டில் ஏப்ரல், மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த மலர் கண்காட்சியைக் காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவியும் மலர் கண்காட்சியை அலங்கரிக்க பல லட்சம் மலர் செடிகள் வளர்க்கும் பணியில் ஏற்காடு தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பாண்டில் மலர்க்கண்காட்சியை சிறப்பாக நடத்த முதற்கட்ட பணியாக கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்காட்டில் தோட்டக்கலைத்துறை வசம் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் 40 வகை மலர்களைக் கொண்ட 2 லட்சம் மலர் செடிகளின் விதைகளை நடும் பணி தொடங்கியது.
பால்சம், ஜினியா, சால்வியா, கிரை சாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டல், கைலார்டியா போன்ற செடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா செடிகள், சுமார் 4,000 செடிகள், தொட்டிகள் மற்றும் மலர் படுகைகளில் நடவுச் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நடவுச் செய்யப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து மே மாதத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும் வகையில் அனைத்து செடிகளையும் தயார்படுத்தும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


