ட்ரெண்டிங்

 16,349 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜூன் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி காணொலிக் காட்சியின் வாயிலாகக் கலந்து கொண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 16,349 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 119.80 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஜூன் 03- ஆம் தேதி மகளிர் சுய உதவிக் குழு தினத்தை சிறப்பிக்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் வாயிலாக 842 ஊரக பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 77.80 கோடி வங்கி கடனுதவிகளும், 2 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூபாய் 1.50 கோடி வங்கி பெருங்கடனுதவிகளும், ஊரக பகுதியிலுள்ள பெண் தொழில் முனைவோர்களான 23 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 20 லட்சம் தொழிற்கடனுதவிகள் வழங்கப்பட்டது. 

மேலும், 428 நகர்ப்புற மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூபாய் 35.74 கோடி வங்கி கடனுதவிகளும், 8 நகர்ப்புற பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி ரூபாய் 4.37 கோடி பெருங்கடனுதவிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஒரு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு ரூபாய் 19 லட்சம் இணை மானியம் என மொத்தம் 1,382 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 16,349 உறுப்பினர்களுக்கு ரூபாய் 119.80 கோடி கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வாணி ஈஸ்வரி, வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் ஜெய கணேஷ், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.