சுற்றுலா

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை!

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ள நிலையில், நடப்பாண்டில் 3- வது முறையாக நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஜூலை 30- ஆம் தேதி முதல் முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. தொடர்ந்து, ஆகஸ்ட் 12- ம் தேதி இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

இன்று (டிச.17) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 7,148 கனஅடியில் இருந்து 7,368 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 91.14 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

அதே சமயம், அதிகப்படியான மழை பெய்தால், ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்பும் உள்ளது. மேட்டூர் அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளதால், காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.