சேலம் மாவட்டம், அரியாக்கவுண்டம்பட்டியில் ரூபாய் 25.34 கோடி மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ள வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தின் மூலம் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து சேலம் வெள்ளிக்கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் சங்கத் தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது, வெள்ளிப்பொருட்கள் உற்பத்திக்கு பன்மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகும். வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பன்மாடி கட்டிடம் கட்ட அனுமதியளித்தது.
கொலுசு உற்பத்தியாளர்களுக்கென 1.209 ஏக்கர் பரப்பளவில் 102 தொழிற்கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 4,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கு வெள்ளியைக் கட்டியாகக் கொண்டு வந்தால் அரைஞாண் கயிறு என பல வகைகளில் வெள்ளிப் பொருளாக வெளியே கொண்டு வரப்படும். அனைத்து பட்டறைகளும் இங்கு இடம்பெறும். இந்த பன்மாடி கட்டிடம் மூலம் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு காலவிரயம்; அலைச்சல் குறையும்; இந்த மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.


