மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63 நாட்களுக்கு பிறகு 50 அடியை எட்டியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 40,000 கனஅடியைக் கடந்து தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த ஜூலை 04- ஆம் தேதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று (ஜூலை 18) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20,910 கனஅடியில் இருந்து 23,989 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 44.80 அடியில் இருந்து 50.03 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 17.83 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின்நிலையம் வழியாக நீர்த்திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 14 நாட்களில் 10 அடி அளவிற்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் ஒருவாரத்தில் சுமார் 70 அடியாக அணையின் நீர்மட்டம் உயரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்டா பாசனத்திற்கான அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகளுடன் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


-SXgDfGgJfO.jpg)