உலக தண்ணீர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ஒன்றான அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் ஊராட்சியில் இன்று (மார்ச் 29) மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி பார்வையாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது உலக தண்ணீர் தினம் மார்ச் 22- ஆம் தேதி அன்று ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளிலும் இன்றைய தினம் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 2025- ஆம் ஆண்டிற்கான உலக தண்ணீர் தினத்தினை பனிப்பாறை பாதுகாப்பு என்கிற சிறப்பு கருப்பொருளினை அடிப்படையாகக் கொண்டு இன்றைய கூட்டம் நடத்தப்படுகிறது.
நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்கு 2030-க்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த இலக்குகளை அடைய நாம் தனிமனிதனாக. குடும்பமாக, சமூகமாக இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக 2024- 25-ஆம் நிதியாண்டிற்கு தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உங்களது வீராணம் கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 10 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
வீராணம் கிராம பொதுமக்களாகிய உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும், இதே நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்நிதியை இக்கிராம ஊராட்சியில் குடிநீர் வசதி மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தவும், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மையக்கட்டடம் கட்டுவதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி கட்டுவதற்கும், புதிய மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், தற்பொழுது கோடைகாலம் என்பதால் வெயில் காரணமாக உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள நீர் சார்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து, அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்.
இன்றைய தினம் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் வான்தரும் மழைநீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளர்த்தல், நீர் நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக் கூறுதல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் 01- ஆம் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28- ஆம் தேதி வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம வளர்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன்(குடிநீர்) இயக்கம், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதியதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தினை கிராம சபையில் விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், கள ஆய்வு கருவிகளைப் பயன்படுத்தி 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்தல், வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை உறுதி செய்தல், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல், அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் குளோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக தகுதிபெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், பண்ணை மற்றும் பண்ணை சாரா வாழ்வாதார நடவடிக்கைகளில் சொட்டு நீர்ப் பாசனம். தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் போன்ற நுண்ணீர்ப் பாசன முறைகளை பின்பற்றுவது குறித்தும், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இன்றைய தினம் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற நகர, கிராம பஞ்சாயத்து என்ற இலக்கை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்தும், அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பொருள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துளளார்.



-SXgDfGgJfO.jpg)