சேலம் மரவனேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இன்று (மார்ச் 21) Theorising Subaltern Voices and Narratives நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றிய திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாளும், கர்ணனும் வேறுவேறு பாதிப்புக்குள்ளானவர்கள். எனவே இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பரியேறும்பெருமாள் தோல்வியடைந்திருந்தால் இன்னொருவர் அதுபோன்ற கதையை யோசிக்கவே மாட்டார். அப்படத்தின் வெற்றி அதனைத் தொடர்ந்து வலிகள் நிறைந்த கதைகளை படமாக்கியது தற்போது பல இயக்குநர்களுக்கு சிக்கலாகிவிட்டது. என்னோடு என்னைவிட வலிமிகுந்த மனிதர்கள் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் கலைத்துறையை தேர்ந்தெடுத்தேன்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, காமெடி படங்களை எடுக்க படிக்கத் தேவையில்லை; யோசிக்கத் தேவையில்லை. நான் இயக்கிய படத்தை பார்த்துவிட்டேன் என என் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் சொல்வதுதான் வெற்றி. மறைமுகமாக எனக்காக ஒலிக்கின்ற குரல்களே எனது பெருமை என நினைக்கிறேன்.
தலித் குரல், பொது சமூக குரல் என்று எதுவுமில்லை அனைத்தும் மானுட குரல்தான். பொது சமூகத்தின் குரலாக என் படைப்புகளை மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை எனத் தெரிவித்துள்ளார்.


