பசுமை எற்காடு திட்டத்தின் கீழ், திட மற்றும் திரவக் கழிவுகள் மேலாண்மை குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் நேற்று (ஜன.21) சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப்பின் ஆட்சியர் தெரிவித்ததாவது, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் முக்கிய சுற்றுலாத் தளமான எற்காட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எற்காடு மலைப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்ட பசுமை ஏற்காடு திட்டத்தின் கீழ், திட மற்றும் திரவக் கழிவுகள் மேலாண்மை குறித்து ஏற்காடு வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஏற்காடு பகுதிகளில் உள்ள குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி பெறாமல் என்கிற நில வகைபாடு மாறுதல்கள் செய்யக் கூடாது எனவும், 250 சதுர மீட்டருக்குள் உள்ள குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இணையதளம் வாயிலாக உரிய அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைப் பிரித்துத் தரவும், மேலும் இவைகளை சேகரிப்பதற்கு சிறு கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கு வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏற்காடு சுற்றுப்புற பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தவறும் பட்சத்தில் வனத்துறையினரால் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, ஏற்காடு பகுதிகளில் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மட்டுமே ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் குப்பைகளோ, செப்டிக் டேங்க் கழிவுகளோ கொட்டக்கூடாது எனவும், மீறினால் வனத்துறை மூலம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்காட்டின் பசுமை சூழலைப் பாதுகாத்திட தங்கும் விடுதிகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


-SXgDfGgJfO.jpg)