சேலம்:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அசோக் லைலாண்ட் மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனத்தில் இருந்த ஜாகிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து உணவுப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் 1400 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், தீபக் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


