ஜலகண்டாபுரம் பகுதிகளில் சாமந்தி பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் சாமந்தி, செவ்வந்தி, செவ்வரளி, ஜாதிமல்லி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்துள்ளனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
இவ்வாறு பூக்கள் அதிக மகசூல் கொடுத்தாலும் கடந்த மாதம் ஒரு கிலோ ரூபாய் 120- க்கு விற்பனை ஆன சம்பந்தி பூ தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, சாமந்தி பூ ஒரு கிலோ ரூபாய் 20- க்கு வியாபாரிகள் வாங்குவதால் விவசாயிகள் கவலை அடைந்து பூக்களை பறிக்காமல் வயலிலேயே விட்டு வைத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் சாமந்தி பூக்களை ஒரு கிலோ ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை மிகவும் குறைந்த விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த விலை வீழ்ச்சியால் நாங்கள் கவலை அடைந்து உள்ளோம். இதனால் பூக்களை பறிக்காமல் வயல்களிலேயே விட்டு வைத்து உள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


