ஆன்மிகம்

சுகவனேஸ்வரர் கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேகம்!

 

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சேலம் மாநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் நள்ளிரவு 12.15 மணியளவில் நடராஜர் மற்றும் அம்மனுக்கு பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், திருமஞ்சனம், பால் போன்ற திரவியங்களால் விடிய விடிய சிறப்பு அபிஷேகங்கள் இன்று (ஜன.13) அதிகாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. 

 

இந்த சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, இன்று காலை 07.00 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம் முன்பாக ஆருத்ரா தரிசனம் காட்சியும், மூலவர் சுகவனேஸ்வருக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்துப்படியும் நடைபெற்றது. பின்னர் காலை 09.00 மணியளவில் நடராஜர், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. 

 

இதேபோல் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் திருக்கோயில்களில் விடிய விடிய நடராஜர், அம்மனுக்கு மஹா சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.