சேலம் மாவட்டம், மேட்டூரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத நகராட்சி நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்தும், சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், கடை வாடகை உள்ளிட்டவற்றை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்தும், சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜன.09) நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலாருமான மோகன் தலைமை வகித்தார். சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளங்கோவன், மேட்டூர் நகராட்சி ஊழலின் ஊற்றுக்கண்ணாக செயல்பட்டு வருகிறது. மூடப்பட்ட நூல் மில்லுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 2 கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்து நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினர். சேலத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியவர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உயர்த்தப்படவில்லை; துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அ.தி.மு.க. ஆட்சியில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி வழங்கப்பட்டது.
மின் கட்டணத்தை உயர்த்தினால் விலைவாசி உயரும் என்பதால் அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயரவில்லை; ஆனால் தி.மு.க. அரசு பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூரில் இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேட்டூர் நகராட்சி மட்டுமல்ல; மேச்சேரி ,கொளத்தூர் பேரூராட்சிகளிலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது .
எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொங்கலுக்கு ரூபாய் 5,000 வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் தற்போது பொங்கலுக்கு பணம் வழங்கவில்லை; 80 ஆண்டு காலமாகத் தூர்வாரமல் இருந்த மேட்டூர் அணை அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ரூபாய் 22,500 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
2026- ஆம் ஆண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ப.மோகன் பேசியதாவது, அ.தி.மு.க. ஆட்சி பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீர் வசதி, சாலை வசதி மேட்டூர் தொகுதி மக்களுக்கு செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு பத்து அமாவாசை மட்டும் தான் உள்ளது. அதன் பிறகு எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சர் தமிழகத்தில் அமையும்.
மேட்டூர் நகராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுகால்வாய் செய்து தரவில்லை; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர சட்டம் கொண்டனர் எடப்பாடி பழனிசாமி. சட்டப் போராட்டம் நடத்தி 26 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்தவர் ஜெயலலிதா" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் கலையரசன், அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் வெங்கடாசலம், சேலம் புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா சரவணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி சித்ரா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



-hcTFAGMRGb.jpg)