ட்ரெண்டிங்

தண்ணீர் மாயம்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

கர்நாடகா அணிகளில் இருந்து திறக்கப்பட்ட 6.29 டி.எம்.சி. தண்ணீர் மாயமாகியுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தெரிவித்துள்ளனர். 

கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14- ஆம் தேதி வரை விநாடிக்கு 13,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 9,136 கனஅடி நீருமாக மொத்தம் 14,136 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டு வருவதாக கர்நாடகா பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருவது தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 4.71 டி.எம்.சி. தண்ணீரும், மேட்டூர் அணைக்கு 3.20 டி.எம்.சி. தண்ணீரும் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தற்போது அணையின் நீர்மட்டம் 54.10 அடியாக உள்ளது. நீர்இருப்பு 20 டி.எம்.சி. ஆக உள்ள நிலையில், நீர்வரத்து வினாடிக்கு 552 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 6,000 கனஅடியாகவும் உள்ளது.