சுற்றுலா

ஏற்காட்டில் இன்று கோலாகலமாக துவங்கும் 49வது கோடை விழா !

 

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு பகுதியில் நடைபெறும் 49வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்குகிறது.

இந்த விழாவை இன்று காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைக்கிறார்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெற உள்ளதால் ஏற்காடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

போக்குவரத்தில் முக்கிய மாற்றம் – காவல்துறை அறிவிப்பு

கோடை விழாவையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.அதன்படி, ஏற்காடு மலைப்பாதை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் ஏற்காடு செல்லும் பயணிகள் கோரிமேடு வழியாக மேலே செல்ல வேண்டும் என்றும், மலையிலிருந்து கீழிறங்கும் வாகனங்கள் கொட்டச்சேடு – குப்பனூர் சாலை வழியாக இயக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்காக 13 சிறப்பு பேருந்துகள் :-

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காட்டிற்கு கூடுதலாக 13 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள்,கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மே 24ஆம் தேதி செல்லப் பிராணிகள் கண்காட்சி :-

இந்தாண்டு கோடை விழாவின் முக்கிய அம்சமாக மே 24ஆம் தேதி செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆடு, மாடு, பசு, நாய், முயல் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட மாடுகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விலங்கு உருவங்கள் மற்றும் பல்வேறு கலை வடிவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் உற்சாகம் குளிர்ச்சியான காலநிலை, மலர்களின் மணம், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் தொடர் கலை நிகழ்ச்சிகள் காரணமாக ஏற்காடு கோடை விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர தொடங்கியுள்ளனர்.இதனால் ஏற்காடு பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.