சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ஏலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களது 20 ஏக்கர் பூர்வீக நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணிக்கம் என்பவர் கூறுகையில்,
தங்களது குடும்பத்துக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) செல்வகுமார், தாசில்தார் கருணாகரன் மற்றும் சர்வேயர் ஆகியோர் இணைந்து போலியான ஆவணங்கள் தயாரித்து தனிநபருக்கு விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து காவல்துறை மற்றும் பதிவுத்துறையில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணிக்கம், அவரது குடும்பத்தினர் நிலா மற்றும் சாந்தி ஆகிய மூவரும் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு மூவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தி மனு பெற்றுக் கொண்டனர்.
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டப்படும் விஏஓ, தாசில்தார் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


