ட்ரெண்டிங்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் கவனத்திற்கு!

 
மாநில அளவில் நடைபெறும் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் சென்னை. நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி வரும் 21/09/2024 முதல் 06/10/2024 வரை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்ததில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப்பொருட்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலை பொருட்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களுக்கும் அரங்குகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் வரும் செப்.15- ம் தேதிக்குள்
https://exhibition.mathibazaar.com/login என்ற இணையத்தளத்தில் பதிவுச் செய்து 
பயன்பெறலாம்.
இவ்வாறு
மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.