ட்ரெண்டிங்

ரூபாய் 200 நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது!

ரூபாய் 200 நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது! 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள ராஜகணபதி நகர் பகுதியில் இறைச்சிக் கடைகளை நடத்தி வரும் அண்ணாதுரை என்பவரிடம் உபைஸ் அலி 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து சில்லறைப் பெற்றுள்ளார். அப்போது அந்த நபர் கொடுத்த 200 ரூபாய் நோட்டு வழக்கத்திற்கு மாறாக இருப்பதையறிந்த அண்ணாதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் உபைஸ் அலியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மேட்டூர் சதுரங்காடியில் காஜா மைதீன் என்பவருக்கு சொந்தமான Z ஷாப் என்ற பெயரில் பேன்சி ஸ்டோர் கடை வைத்துள்ளதாகவும், இந்த கடையில் வைத்து 200 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் நகல் எடுத்து புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

பின்னர் காவல்துறையினர், மேட்டூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த காஜா மைதீன், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல்ஹக்கீம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த உபைஸ் அலி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காஜா மைதீன் வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனை அடைக்க முடியாததால், ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் நகல் எடுத்து புழக்கத்தில் விட முடிவு செய்தது தெரிய வந்தது. 

அவர்களிடம் இருந்து மூன்று 200 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கள்ள நோட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பிரிண்டர்ஸ் மற்றும் கணினியைப் பறிமுதல் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவம் மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.