விடுதி மாணவி அத்துமீறலுக்கு ஆளானதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக திருச்சி என்.ஐ.டி. அறிக்கையின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருச்சி என்.ஐ.டி. விடுதி மாணவி அத்துமீறலுக்கு ஆளானதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
இதனிடையே, என்.ஐ.டி. விடுதியில் மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் கதிரேசன், பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி என்.ஐ.டி. மாணவ, மாணவிகள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறை எஸ்.பி. வருண்குமார், நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட நிலையில், திருச்சி என்.ஐ.டி. அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



