ட்ரெண்டிங்

ஏற்காட்டிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு! 

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காடு மலைப் பகுதிகளின் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்திடவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடுகளைத் தவிர்த்து மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டினை அதிகரித்திடுதல், ஏற்காட்டில் உருவாகும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பசுமை ஏற்காடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பசுமை ஏற்காடு திட்டம் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் பொருட்டு சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்கள் மற்றும் தங்கும் உணவு விடுதிகளில் உருவாகும் குப்பைகளை மேலாண்மை செய்வது குறித்தும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகளை முற்றிலும் தடைசெய்தும், அதற்கான மாற்று பொருட்களான மஞ்சப்பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் பலதுறை அலுவலர்களுடன் தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டங்களில் மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் 24/02/2024 நாளிட்ட அரசானை எண்- 35-ன் படி சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் (Plastic Carry bags of All sizes & thickness) முற்றிலும் தடை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், தங்கும் விடுதிகள், உணவுவிடுதிகள் மற்றும் இதர கடை உரிமையாளர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியும் மாற்றாக மஞ்சப்பை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத துணிப்பைகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பைகள் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கிட
அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.