ஆன்மிகம்

ஆனி அமாவாசை- வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! 

ஆனி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம் மாநகரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில், சின்னக்கடை வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

குறிப்பாக, சேலம் குரங்குச்சாவடியை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முனியப்பனை வழிபாடு நடத்தி வருகின்றனர். அமாவாசையையொட்டி, வெண்ணங்கொடி முனியப்பனுக்கு செந்தூர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

அதேபோல், சேலம் மேச்சேரியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.