ட்ரெண்டிங்

ஆவணங்களை அள்ளிச் சென்ற தணிக்கைக் குழு!

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வில், முறைகேடு நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பல்வேறு ஊழல் புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் காவல்துறையினரால் கைதாகி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், உள்ளாட்சி நிதித்தணிக்கைத் துறைத் துணை இயக்குநர் லீலாவதி தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர், பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதித்துறை அலுவலகத்தில் நேற்று (ஜன.18) காலையில் இருந்து ஆய்வுச் செய்தனர்.

 

 ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கிய நிதிகளின் பயன்பாடு வரவு, செலவுக் கணக்குகள், பல்கலைக்கழக பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவைக் குறித்து இந்த குழுவினர், ஏழு மணி நேரத்திற்கும் மேலாக தணிக்கைச் செய்தனர்.

 

ஜெகநாதன் துணைவேந்தராகப் பதவியேற்ற பின்னர் வாங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள், அதற்கான ரசீதுகள், அதன் உறுதித்தன்மை உள்ளிட்டவைக் குறித்து தணிக்கைக் குழு, இரவு 07.00 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர், இது தொடர்பான ஆவணங்களை க் கட்டுக்கட்டாக அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். இதில், பல்கலைக்கழகத்துக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும், தகவல் வெளியாகியுள்ளன.