ட்ரெண்டிங்

கள்ளச்சாராய விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்- இ.பி.எஸ். வலியுறுத்தல்! 

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் சிகிச்சைப் பெற்று வரும் பலருக்கு கண் பார்வை தெரியவில்லை என தகவல் கிடைத்துள்ளது; கள்ளச்சாராயம் மரணம் குறித்து விவாதிக்க பேரவையில் அனுமதி வழங்கவில்லை; கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர் மரணத்தால் மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். 

இன்னும் எத்தனை பேர் இறப்பார்கள் என தெரியவில்லை. கள்ளக்குறிச்சியில் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய தி.மு.க. கவுன்சிலர்கள் உடந்தையாக உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கள்ளச்சாராயம் மரணம் விவகாரத்தை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. கள்ளச்சாராய மரணம் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். 

மக்களின் பிரச்சனையை பேசவிடாமல் எங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கு கண்டனத்திற்குரியது. திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளச்சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்துள்ளனர். மக்கள் அதிகம் நடமாடும் மைய பகுதியில் 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.