ட்ரெண்டிங்

சாதிவாரி கணக்கெடுப்பு தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 

தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தருமபுரி- காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், நாளை (டிச.18) எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 100 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது. அதிலிருந்து 5 டி.எம்.சி தண்ணீரைப் பயன்படுத்தி சேலம் மாவட்டம் முழுமைக்கும் காவிரி உபரிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

 

குறைந்தபட்சம் சேலம் மாவட்டத்தில் காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்ட நதிகளை இணைத்து உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1,400 அடியில் இருந்து 200 அடிக்கு மாறும் நிலை ஏற்படும்.

 

சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கூறி ஒதுங்காமல், தி.மு.க. அரசு தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட முன்வர வேண்டும். இதன் மூலம் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை உருவாகும். இல்லையெனில் இப்பிரச்சினையில் ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து பா.ம.க. போராட்டம் நடத்தும்.

 

மேட்டூர் அணையை உடனடியாகத் தூர்வார வேண்டும். கொளத்தூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தோனிமடுவில் தடுப்பணை கட்ட வேண்டும். சென்னை மழை வெள்ள பாதிப்பைத் தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு போதிய அளவில் எடுக்கவில்லை. தற்போது வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். சென்னையில் மழை பாதிப்புகளைத் தடுத்திடும் வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்ற முன்மாதிரி தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும்.

 

கடந்த 10 வருடங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும். தொப்பூர் பகுதியில் விபத்து அபாயம் மிக்க சாலையை சீரமைக்க மத்திய அரசு ரூபாய் 775 கோடி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.