ட்ரெண்டிங்

நீர் திறப்புக் குறைப்பால் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி!

டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவுக் குறைக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்காக, கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் வரை சுமார் 125 டி.எம்.சி. தண்ணீர் தேவை என்ற நிலையில், அப்போதில் இருந்து சுமார் 65 டி.எம்.சி. நீர் இருப்பைக் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டது. 

ஆனால், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழைப் பொய்த்துப் போனது. தமிழகத்திற்கான பங்கீடானா 88 டி.எம்.சி. தண்ணீரில் இதுவரை 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கர்நாடகா அரசு திறந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்த நீர் இருப்பில் இதுவரை, சுமார் 50 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

எனினும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் முழுமையாகச் சென்று சேராததால், பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவதால், தண்ணீர் திறப்பின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. 

இன்று (ஆகஸ்ட் 09) காலை 08.00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.39 அடியாகக் குறைந்துக் காணப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 4,654 கனஅடியாகக் குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.