சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி நாளைய தினம் தொடங்கவுள்ளதையொட்டி, ஏற்காட்டில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புக் குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்காட்சி நாளைய தினம் தொடங்கி, மே 26- ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகங்களில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.கதிரவன் தலைமையிலான குழுவினர் ஏற்காட்டில் செயல்பட்டு வரும் அனைத்து உணவங்களிலும் இன்று (மே 21) அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் குழம்பு உள்ளிட்டவைகளை வழங்க பயன்படுத்தியதற்காக 3 கடைகளுக்கு தலா ரூபாய் 2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, ஆய்வு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படுவதையும், உணவுப் பொருட்களுக்குரிய விலையினை கணினி மூலம் மட்டுமே இரசீது வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை தொடர்ச்சியாக நாள்தோறும் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)