ட்ரெண்டிங்

சேலம் கோவிந்தனிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி முறையிட்ட பெண்கள்! 

சேலம் கோவிந்தனிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி முறையிட்ட பெண்கள்! 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடுகுடுப்புக்காரர் வேடமணிந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவரிடம் பெண்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாகச் செய்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், தமிழ்நாடு முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என குடுகுடுப்புகாரர் வேடமணிந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

இந்த நிலையில், பாப்பிரெட்டிபட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்ற சேலம் கோவிந்தன், தருமபுரி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் என்று குடுகுடுப்பை ஆட்டிக் கொண்டு பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது, அங்கிருந்த பெண்கள் முதலில் மதுபான கடைகளை மூட சொல்லியும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கோரியும் சேலம் கோவிந்தனிடம் முறையிட்டனர். 

இதையடுத்து, அவர் தனது பிரச்சாரத்தை நிறைவுச் செய்து, வேறு இடத்திற்கு சென்றார்.