ட்ரெண்டிங்

துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்! 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டிய பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு ஓய்வூதியமா?, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தையும் மீறி ஓய்வுக்காலப் பயன்களுடன் ஓய்வூதியத்தையும் வழங்கி துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியர் பணிக்கு தகுதியற்றவர் என அரசு அறிவித்த ஒருவருக்கு விதிகளை மீறி ஓய்வூதியம் வழங்கியது கண்டிக்கத்தக்கது. 

ஓய்வுபெற்ற பதிவாளர் தங்கவேலுவுக்கு எதிராக வழக்கு, விசாரணை, தணிக்கைத் தடை நிலுவையில் உள்ள போது ஓய்வூதியம் வழங்கியது விதிமீறல். துறை சார்பில் தணிக்கை மேற்கொண்டு ஒப்புதல் தந்த பிறகே ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்கப்பட வேண்டும். தற்காலிக நிதி அலுவலரை நியமித்து ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் ஏற்பாடு செய்தது சட்டவிரோதம். இனியும் தாமதிக்காமல் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்ய வேண்டும்; முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு ஓய்வூதியம் வழங்கி பிறப்பித்த ஆணையை ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.